ஓரினச்சேர்ககைப் பற்றி வெகு நாளாகவே எழுத வேண்டும் என்ற என் மனதில் இருந்தது. ஆனால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் ஓரினச்சேர்க்கைப் பற்றிய சில புரிதல்களை இங்கு தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்.
என்ன எடுத்த உடனேயே காரசாரமாக ஆரம்பிக்கிறீர்கள் என்கிறீர்களா? என்ன செய்ய சிலருக்கு உரைக்கும் மாதிரி சொன்னால் தானே அவர்களுக்கு உரைக்கிறது. சில வாரங்களுக்கு முன் கனடாவில் ஒரு தமிழ் விளம்பரம் ஓரினச்சேர்க்கையாளரை தவறாக சித்தரித்து வெளியிட்டதும் இந்தப் பதிவை எழுதலாம் என்று எத்தனித்தேன். இருந்தாலும், கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தான் விட்டுவிட்டேன். கனடாவைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளில் அவ்வாறான நிலை இல்லை.
ஏன் இந்தப் பதிவு?
பாலியல் வேறுபாடு உள்ளவர்களை உங்களைப் போன்று நானும் முட்டாள்தனமான சினிமா சித்தரிப்புகளாலும், மக்களின் பொதுக் கருத்துக்களாலும் அறிந்துக் கொண்டவன் தான். ஆனால் எனது வாழ்வில் அவர்களை கண்ட பொழுது ஏற்பட்ட நிகழ்வுகள் அவர்களின் உண்மைத்தன்மையை ஆராய் வைத்து விட்டது. முதல் சம்பவம் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் எனது கல்லூரி காலத்தில் கிண்டி – தாம்பரம் மெட்றோ இரயிலி ஏற்பட்டது. அந்த இரயில் அரவாணிகள் சிலர் பிச்சை எடுப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு அரவாணி அக்கா, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் பெரும் பாலானோர் போடவில்லை. ஒரு சில பெற்றோர் பிள்ளைகள் கைகளில் காசினைக் கொடுத்து போடச் சொன்னார்கள். என்னிடம் அந்த அக்கா வரும் போது எனக்கு பயமாக இருந்தது, இருந்தாலும் என்னிடம் இருந்த பத்து ரூபாயை எடுத்து கொடுத்தேன் (வேறு சில்லரை இல்லை) . அதை வாங்கிய சந்தோசத்தில் அவர் தனது கைகளால் திருஸ்டி சொடக்கு எடுத்து நல்லாருக்கணும் ராசா என்றார். அப்போது நிமிர்ந்து அவரின் கண்களைப் பார்த்த போது அவற்றின் ஓரத்தில் இருந்த கண்ணீர் துளிகள் எனது அதுநாள் வரை இருந்த நம்பிக்கைகளை மாற்றி விட்டது. ஆம் !!! அவர்களும் மனிதர்கள் தானே. நம்மை படைத்த அதே ஆண்டவன் தான் அவர்களையும் படைத்தான். அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. இதன் பின் நடந்த பல சம்பவங்கள் என்னை ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய புரிந்துணர்வினை ஏற்படுத்தியது எனலாம். ( அனைத்து சம்பவங்களையும் கூறினால் பதிவு நீண்டு விடும் ).
ஓரினச்சேர்க்கையாளர் விளக்கம்:
ஓரினசசேர்க்கையாளர்கள் என்பதை ஆங்கிலத்தில் Homo-Sexuality என்கிறார்கள். அதாவது ஹோமோஸ் என்றால் கிரேக்கத்தில் ஒரே என்று பொருள். ஓரே பாலியல் இனத்துக்குள் நடக்கும் பாலுறவினை Homo-Sexuality என்கிறார்கள். ஓரினச்சேர்க்கையாளர்களில் அனைவரும் ஒரே மாதிரியான உணர்வு கொண்டிருப்பதில்லை. அவர்களில் வகைகள் உண்டு. அவை ஆண்,ஆணுடன் புணர்தல், இவர்களை சில இடங்களில் gay என அறியப்படுகின்றனர். பெண், பெண்ணுடன் புணர்தல் இவர்கள் lesbian என அறியப்படுகின்றனர். இருபாலினடத்தினரிடம் ஈர்ப்புக் கொள்ளுதல் இவர்கள் Bisexual என அறியப்படுகின்றனர். இன்னொரு வகையினர் அரவாணிகள் அல்லது Transgender என அறியப்படுகின்றனர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் அனைவரைப் பற்றிய புரிதல் நம் சமூகத்தில், குறிப்பாக இன்றைய கால குழப்ப சமூகத்துக்கு இல்லை எனலாம். அரவாணிகள் அனைவரையும் புறக்கணித்து வருகின்ற நிலையும், ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகாரம் செய்யாமல் அவர்களின் வாழ்க்கையும், அவர்களை நம்பி திருமணம் செய்தோரின் வாழ்வையும் சிதைத்து விடுகிறோம்.
இந்த நால்வகை மாற்று பாலியல் அடையாளம் கொண்டவர்களை சில நேரங்களில் நாம் அறிந்துக் கொள்ள தவறி விடுகிறோம். இவர்களில் முதல் மூன்று வகையினரும் ஆணாகவோ, பெண்ணாகாவோ இருக்கும் வாய்ப்பு உண்டு.நாலாவதாய் இருக்கும் அரவாணிகள் மட்டமே மூன்றாம் பாலினமாக கருதலாம். அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இருக்கின்றனர். அர்தநாதீஸ்வர உருவத்தில் என சொல்லலாம். அவர்களை Transgender எனக் அழைக்கின்றோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆணுடலில் பிறந்து பருவ வயதில் பெண்மைத் தன்மை வெளிப்படுபவர்கள். இவர்களில் பலரை பிச்சை எடுக்கும் போது கண்டிருப்போம். இன்னொரு வகையினர் பெண்ணாக பிறந்து பருவ வயதில் ஆணாக மாறி ஆணைப் போன்று உலாவி வருபவர்கள். இவர்களை Transgender என அறியப்படுகின்றனர்.
இவர்களின் பாலியல் குறைப்பாடு பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. அதாவது அவர்களின் பாலியல் குரோமோசோம்களில் ஏற்படும் குளறுபடித் தான் இதற்கு காரணமாக அமைகின்றது. ( அவற்றைப் பற்றி பெரிதாக விளக்கப்போவதில்லை).
மற்ற முதல் மூன்று பிரிவினரும் மன சம்பந்தபட்ட பாலியல் வேறுபாடினை கொண்டவர்கள் (Sexual Orientation). அவர்கள் குரோமோசோம்களால் நிர்ணயிக்கம் செய்யாமல். அவர்களின் பருவ காலத்தில் ஏற்படும், மனவியல் மாற்றங்களாலும், சுரப்பிகளில் ஏற்பட்ட மாற்றங்களாலும், பாலியல் வேறுபாட்டினை அடைகின்றனர். இந்த வகையினர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கின்றனர். சிலர் ஆண் பெண்ணைப் போன்று உடையணிந்தும், பெண் ஆணைப் போன்று உடை அணிந்தும் வாழ்கிறவர்களும் உண்டு.
தான் ஒரு ஆணா இல்லை பெண்ணா என குழப்ப நிலையில் இருப்பவர்கள் இவற்றில் அடங்குவது இல்லை. அப்படியானவர்கள் கவுன்சலிங்க் எடுத்துக் கொள்வது நலம்.
ஓரினச்சேர்க்கை செயற்கையான சுகத்தேடலா?
உடல் மற்றும் மனவியல் வேறுபாடு கொண்ட மேற்கூறிய வகை சார்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களை ஓரினப்பிரியர்கள் என ஒன்றிணைப்பது முட்டாள் தனம். இங்கு தான் நாம் அவர்களை புரிந்துக் கொள்ள மறுக்கின்றோம், குழம்பிக் கொள்ளுகிறோம். ஓரினச்சேர்க்கையாளர்களின் பாலியல் அடையாளம் அவர்களுக்கு இயற்கையால் தரப்படுவது. குறிப்பாக பருவம் எய்தும் வயதிலேயே இதனை உணர்கின்றனர். ஆனால் வெறும் சுகானுபவங்களுக்காக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்ளை இந்த வகையில் சேர்ப்பது நியாயம் இல்லை. ஒரு கருத்துக் கணிப்பின் படி 90 சதவீதம் இயல்பான ஆண்கள் ஓரினப் பிரியர்களாக இருப்பதில்லை, ஆனால் சிலர் ஓரினப் பிரியர்களாக இருப்பது மட்டுமின்றி, ஓரினச்சேர்க்கையைப் பற்றிய புரிதல்கள் இல்லாமலும் இருக்கின்றனர். இவர்களால் நிச்சயம் பாலியல் நோய்கள் வருவது உறுதி எனலாம். ஒரு நேர் பாலின ஆணும் ஆணும், அல்லது நேர் பாலின பெண்ணும் பெண்ணும் ஒன்றாக தனிமையில் இருக்கும்போது வெறும் உள்ளக் கிளர்ச்சியை சரி செய்துக் கொள்ள பாலுறவில் ஈடுப்பட்டால் அவர்களை ஓரினச்சேர்க்கையாளர்களாக கருத முடியாது. இருபாலினசேர்க்கையாளர்களாகவும் (Bisexuals) கருத முடியாது. இவ்வாறான செயல்கள் சிறைச்சாலைகளிலும், விடுதிகளிலும் இருக்கின்றன.
இப்படியான ஓரினப் பிரியர்களுக்கு கவுசிலிங்க் ஒன்றே தீர்வாக அமையும். இவ்வாறான ஓரினப்பிரியர்களைத் தான் விவிலியம் அழிக்கப்பட்ட சோத் என கடிந்துரைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஓரினச்சேர்க்கை இயற்கையானது
ஆரம்ப காலங்களில் அமெரிக்க மனவியல் கூட்டமைப்பு (American Pyschologist Association) இதனை ஒரு குறைப்பாடாகவே கருதி வந்தனர். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட ஆராய்ச்சிகளின் விழைவாக குறிப்பாக Alfred Kinsey, Karen Hooker, போன்றவர்களின் ஆய்வுக்குப் பின ஓரினச்சேர்க்கை என்பது இயற்கையான ஒரு உணர்வே என நிரூபித்து உள்ளனர். 1973ல் அமெரிக்க மனவியல் கூட்டமைப்பு வெளிப்படையாகவே ஓரினச்சேர்க்கை என்பது மனநோய் இல்லை என்றும், அது ஒரு இயற்கையான காதல் வெளிப்பாடு என அறிவித்தது.
ஓரினச்சேர்க்கை மனதர்களில் மட்டுமில்லை,விலங்குகளிலும் உண்டு:
ஓரினச்சேர்க்கை என்பது மனிதர்களில் மட்டுமில்லாமல், விலங்குகளிலும் உண்டு என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். ஆம் ! ஓரினச்சேர்க்கை இயற்கையான உணர்வு தான் என்ற ஆய்வுகள் உறுதி செய்ய விலங்குகளிடத்து காணப்படும் ஓரினச்சேர்க்கை மற்றும் ஓரினப்பிரியம் ஆகியவற்றை வைத்து கண்டறிந்து உள்ளனர்.
சீனாவின் சென்னோங்கியா பகுதியில் தங்கநிற குரங்க்குளை ஆராயும் போது அவற்றிலும் ஓரினச்சேர்க்கை இருப்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை குரங்குகளில் இரு வகை சமூக முறை காணப்படுகின்றன. ஒன்று ஆண்குரங்கு பல பெண் குரங்குகளை மனைவியாக வைத்துக் கொண்டு குட்டிகள் பல ஈய்கின்றன. இன்னொரு வகை வெறும் ஆண் குரங்குகளான குடும்பம். இந்தக் கூட்டத்தில் ஒரு ஆண் தலைவரும், அவருக்கு கீழ் வேறு வேறு ஆண்குரங்குளும், பிற கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஆண் குட்டிக் குரங்குளும் அடங்கும். இந்தக் குழுமத்தில் ஆண் தலைவர் மட்டுமே பெண்ணுடன் உறவு கொள்ளலாம். ஏனையவை உறவுக் கொள்ள முடியாது. பிற ஆண்கள் தலைவர் ஆகும் வரை பெண்ணுடன் உறவுக் கொள்ள முடியாது. ஆகையால் அவை ஆணுடன் ஆண் உறவுக் கொண்டு தனது உள்ளக் கிடக்கையை தீர்க்கின்றன். அறிவியல் ஆய்வாளர்கள் இந்த குரங்கின் ஓரினச்சேர்க்கை தன்மையை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். காரணம் இந்த வகை குரங்குகளுக்கும், மனிதனுக்கும் ஓரே மூதாதையரிடம் இருந்து வந்தவை.
இதே போன்ற ஓரினச்சேர்க்கைகள் டால்பின்கள், லேமன் அல்பாற்றாஸ்கள், பூனைகள் போன்று பல்வேறு உயிரினங்களில் காணப்படுகின்றன. இவையாவும் இயற்கையின் பரிணாமத்தால் உந்தப்பட்டு தொடர்ந்து வருபவை என Trends in Ecology & Evolution என்னும் இதழில் ஆய்வாளர்கள் Bailey மற்றும் Marlene Zuk என்னும் பேராசரியர்கள் கூறுகின்றனர். ஓரினச்சேர்க்கை ஒரு இனத்தில் ஏற்படுவதற்க்கு பல்வேறு குறிப்பான தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன, அவை தட்ப வெப்பம், வாழும் சூழல், மக்கள் தொகை என பல்வேறு காரணங்களை கூறலாம்.
